×

மதுரையில் ரூ.90 கோடி செலவில் புதுப்பொலிவு பெறும் வண்டியூர் கண்மாய்

* தொங்கு பாலத்துடன் அமைகிறது அழகிய குட்டித் தீவு
* அனைவரும் ‘என்ஜாய்’ பண்ணும் டூரிஸ்ட் ஸ்பாட் ஆகுது

மதுரை: மதுரையில் உள்ள வண்டியூர் கண்மாய், ரூ.90 கோடியில் அழகிய குட்டித்தீவுடன் புதுப்பொலிவு பெறுகிறது. தீவுக்கு சென்று வருவதற்கு தொங்கு பாலம் அமைக்கப்படுகிறது. கண்மாயைச் சுற்றி 7 கி.மீ நடைப்பயிற்சி செல்லலாம். அனைவரும் பொழுதுபோக்கும் வகையில் ‘டூரிஸ்ட் பாட்’ ஆக அமைய உள்ளது.மதுரை மாநகரில் வண்டியூர், மாடக்குளம், முத்துப்பட்டி, செல்லூர் என 4 பெரிய கண்மாய்கள் உள்ளன. இவைகள் அனைத்தும், மதுரை மக்களுக்கு நீராதாரமாக விளங்குகின்றன. இதில் வண்டியூர் கண்மாய் சுமார் 620 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்கண்மாய் கே.கே.நகர் பூங்கா, கோமதிபுரம் இடையே மிகப்பிரமாண்டமான அளவில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இங்கு மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீர் பார்ப்பதற்கு கடல்போல காட்சியளிக்கும்.கண்மாயின் தென்பகுதியில் இருந்து பார்த்தால், யா.ஒத்தக்கடை யானைமலை கம்பீரமாக நிற்பதை ரசிக்கலாம்.சுற்றுலாத் தலமாக்க 1981ல் திட்டம்வண்டியூர் கண்மாயை ஆழப்படுத்தி சுற்றுலாத்தலமாக்க கடந்த 1981ல் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் திட்டம் வகுக்கப்பட்டது. கண்மாயின் மத்தியில் தீவு போல அமைத்து, அதற்கு சென்று வர படகு சவாரி அமைத்து அதன்மூலம் வெளிநாட்டு பயணிகளையும் கவர திட்டமிடப்பட்டது. ஆனால், இத்திட்டம் முழுமையடையவில்லை. சுற்றுலா கழகம் சார்பில் படகு போக்குவரத்து விடப்பட்டது. இதற்காக கண்மாயின் தென்பகுதியில் படகு குழாம் அமைக்கப்பட்டது. ஆனாலும், அதுவும் செயல்படுத்தப்படவில்ைல. படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், படகு குழாம் சிதைந்துள்ளது. பின்பு 2012ல் வண்டியூர் கண்மாயின் மையப்பகுதியில், தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படும் என்ற திட்டமும், கிடப்பில் விழுந்தது. இக்கண்மாய் கரைப்பகுதியில் கேகே நகர் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில், சிறுவர் விளையாட்டுப் பூங்கா, நடைபயிற்சி தளம், ஸ்கேட்டிங் தளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. தினசரி சிறுவர் சிறுமிகள், பெரியவர்களுக்கு பயனுள்ள வகையில் இந்த பூங்கா இருக்கிறது.

கிடப்பில் போட்ட அதிமுக ஆட்சிமதுரைக்கான சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மீனாட்சி அம்மனை தரிசிக்கவும், அழகர்கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் சுவாமியை தரிசிக்கவும் வரும் பயணிகளும் இங்கு அதிகளவில் வந்து செல்லவும் வழிவகுக்கும் வகையில், 2009ல் திமுக ஆட்சிக்காலத்தில் வண்டியூர் கண்மாயை தூர்வாரி, ஆழப்படுத்தவும், பூங்காக்கள் உருவாக்கவும் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் அதன்பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அத்திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டது. வண்டியூர் கண்மாயில் கருப்பாயூரணியை ஒட்டிய பகுதியில் மதகு உள்ளது. இங்கிருந்துதான் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.தொங்கு பாலத்துடன் அழகிய தீவுவண்டியூர் கண்மாயை ஆழப்படுத்தி வருடம் முழுவதும் தண்ணீர் நிற்கும் வகையில் அமைத்து, கண்மாய் நடுவில், தீவு அமைத்தால், அதில் படகு போக்குவரத்து விட்டால், சென்னையில் உள்ள மெரீனா கடற்கரையை போல் ஒரு குட்டி மெரீனா கடற்கரையாக காட்சியளிக்கும். மதுரை மக்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு தளமாக மாறும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
முதல்வரின் ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ அறிவிப்புஇந்நிலையில் வண்டியூர் கண்மாயை ஆழப்படுத்தி, மையப்பகுதியில் தீவு அமைத்து, படகு சவாரி விட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சட்டமன்றத்தில் வடக்குத்தொகுதி எம்எல்ஏ. தளபதி கோரிக்கை விடுத்தார்.  இதையேற்று வண்டியூர் கண்மாய், மதுரை மக்களின் டூரிஸ்ட் ஸ்பாட் ஆக மாற்றப்படும் என முதல்வர் அறிவித்தார்.

மதுரை மக்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் ரூ.90 கோடியில் ”டூரிஸ்ட் ஸ்பாட்” திட்டத்தை தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இதில், படகு போக்குவரத்து, அழகிய தீவு, 7 கி.மீ. தொலைவுக்கு சுற்றிலும் நடைபாதை போன்ற வசதிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்படுகிறது.இது குறித்து மாநகராட்சி தலைமை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வண்டியூர் கண்மாயைச் சுற்றிலும் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகள் பொதுப்பணித்துறையுடன் இணைந்து அகற்றப்பட உள்ளது. பின்னர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த இடத்தை கண்டுகளிக்கும் வகையில் பொழுதுபோக்கும் வகையில் சிறந்த இடமாக மாற்றப்படும். 4 படகுகள் படகு சவாரிக்காக விடப்படுகிறது. கண்மாயின் மையப்பகுதியில் அழகிய குட்டித் தீவு உருவாக்கப்படும். அந்த தீவுக்கு தொங்கும் மரப்பாலம் அல்லது இரும்பு பாலம் அமைக்கப்படும். பொதுமக்கள் இப்பாலம் வழியாக தீவு திடலுக்கு நடந்தே சென்று வரும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. கண்மாயை சுற்றிலும் 7 கி.மீ. தொலைவுக்கு நடைபயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே ஓய்வெடுக்க இருக்கைகள் அமைக்கப்படும். நடைபாதையில், ஸ்நாக்ஸ், சிற்றுண்டி, பழக்கடை, டீக்கடைகள் அமைக்கப்படும். கரையோரம் பசுமையாக பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

தண்ணீரின் சுவை அதிகரிப்பு
சமூக ஆர்வலர் ரமேஷ் கூறுகையில், ”வைகை ஆற்றின் குறுக்கே மீனாட்சி கல்லூரி, அரசு மருத்துவமனை பின்புறம் என 2 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த தடுப்பணைகளால், வைகை ஆற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரால், இவ்வாண்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதன் காரணமாக, தண்ணீரின் சுவை அதிகரித்துள்ளது. இதனால் மதுரையில் வழக்கம் போல் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. இதே போல், தெப்பக்குளம், அண்ணாநகர் பகுதியில் வைகையாற்றில் தடுப்பணை கட்டலாம். அத்தோடு வண்டியூர் கண்மாயில் தண்ணீர் தேங்கும்போது, இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயரும். இக்கண்மாயில் ஆண்டுதோறும் தண்ணீர் நிரம்பி இருக்கும்பட்சத்தில் வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து தண்ணீர் தேடி வரும் பறவைகளின் தாகத்தையும் போக்கும்” என்றார்.



Tags : Vandyur Kammai ,Madurai , Vandiyur is an eye-catcher in Madurai, which will be renovated at a cost of Rs.90 crore
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி